Wednesday, June 29, 2011

பட்டினத்தார்




பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.
ஞானம் பிறந்த கதை
சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார் . அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ர ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.
பட்டினத்தடிகள்
அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகல் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.
அன்னையின் ஈமச் சடங்கு
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
பத்திரகிரியார் தொடர்பு
பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் ஞானம் பெற்ற பத்திரகிரி மன்னன் தன் சொத்துக்களைத் துறந்து இவருடைய சீடரானார். பதினெண் சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை.
பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்
சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

• கோயில் நான்மணி மாலை

• திருக்கழுமலை முமணிக்கோவை

• திருவிடைமருதூர் திருவந்தாதி

• திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.
திருவொற்றியூரில் சமாதி
தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது

No comments:

Post a Comment