விதியை மதியால் வெல்ல முடியுமா?
-------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குச் சமர்ப்பணம்!
-------------------------------------------------------------------------------------------
விதியை மதியால் வெல்ல முடியுமா?
வெல்ல முடியாது!
இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்
ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.
அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே
அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!
வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று
உயிருடன் இருந்திக்க வேண்டும்!
அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக்
கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.
அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும்
கிடையாது"
Nothing is stronger than destiny!
மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள்
அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.
ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின்
முடிவில் உள்ள அதிகாரம்
திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி
அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.
ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.
முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே
சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.
அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:
"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"
---குறள் எண் 377
அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில்
பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும்
பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை
அனுபவிக்க முடியாது.
சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே
பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே
சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும்
கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ
ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான்.
விதி அங்கேதான் வேறு படுகிறது.
ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்
"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"
...குறள் எண். 380
ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன?
அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு,
வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும்
வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்
What is stronger than fate (destiny)? If we think of an expedient
to avert it, It will itself be with us (before the thought)
"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
...குறள் எண்.372
பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ்
வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும்
அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும்.
இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது
- ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge.
இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை
எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை வைத்தார்.
அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு
இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து
முடித்தார்.
மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப்
படிதான் நடக்கும்!
அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா
என்ன?
சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?
ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
The Almighty will give standing power!
தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண
குருவின் சரித்திரம் (அதைப் பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
-----------------------------------------------------------------------------------------------------
1
விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய
மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று
சொல்லட்டும் பார்க்கலாம்.
முடியாது!
2
விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த
உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம்.
முடியாது!
ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து,
வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின் துகள்களைத்
தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில்
உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது எப்படி இயங்குகிறது?
உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம்
இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன் அதைச் செய்யவில்லை?
விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.
அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை
விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?
புதிய கீதை
எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்
எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?
எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!
கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!
ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!
இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!
சம்பவாமி யுகே! யுகே!