Sunday, March 20, 2011

அர்த்தமுள்ள இந்துமதம்


அர்த்தமுள்ள இந்துமதம்-(7. விதிப்படி பயணம்! கவியரசு கண்ணதாசன




உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது.
உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே.
ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது.
பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.
ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?
நீ கருப்பையில் இருக்கும் போது, நீ போகப் போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன.
நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்ததே.
மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.
`ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்’
என்றார் வள்ளுவர்.
`ஊழ்’ என்பது பூர்வ ஜென்மத்தையும், விதியையும் குறிக்கும்.
பூர்வ ஜென்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜென்மத்தின் விதி நிர்ணயிக்கப் பெறுகிறது.
அதனை `ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றான் இளங்கோ.
போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜென்மத்தில் எழுதப்படுகிறது.
ஆகவே விதியின் கோடுகள்தாம் உன்னை ஆட்சி செய்கின்றன என்பது, இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
நீ எண்ணியது நடந்தாலும் நடக்கா விட்டாலும், எண்ணாதது நடந்தாலும், யாவும் உன் விதிரேகைகளின் விளைவே.
முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.
“எல்லாவற்றுக்கும் காலநேரம் வர வேண்டும்”என்கிறார்களே இந்துக்கள், அதற்கு என்ன காரணம்?
இன்ன காரியங்கள், உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான்.
நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது, ஹிட்லருக்கு இருந்த வசதியும், ஆயுதப் பெருக்கமும் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.
ஒரே நாளில் போலந்தைப் பிடித்தான்.
வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லாவாகியாவைப் பிடித்தான்.
குண்டு போடாமலேயே பிரான்ஸைப் பிடித்தான்.
அவன் விரும்பியிருந்தால் ஐரோப்பாவையும், ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம்.
வெறும் வாய் வேட்டுக்களையே விட்டுக்கொண்டிருந்த சர்ச்சிலை, அவன் கனடாவுக்குத் துரத்தியடித்திருக்கலாம்.
(சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓடத் திட்டமிட்டிருந்தார்.)
அகில ஐரோப்பாவையும் பிடித்து விட்டால், உலகத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக் காலனிகளாக இருந்த சுமார் எண்பது ஆசிய ஆப்பிரிக்க, அரேபிய நாடுகள் குண்டுகள் போடாமலேயே அவன் கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும்.
இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதே.
ஆனால், விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சி புரிந்தது.
பிரிட்டனைக் `கோழிக் குஞ்சு’ என்று அவன் கேலி செய்துவிட்டு, `யானையைச் சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும்’ என்று, சோவியத் யூனியனுக்குள் நுழைந்தான்.
`அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப்படுகிறது’ என்று விதி சிரித்தது.
சோவியத் யூனியனின் பருவகாலத்தில் அவன் சிக்கிச் சிக்கி இழுபட; அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களைத் தயார் செய்து கொண்டுவிட்டன.
எச்சரிக்கையாக இருந்திராததால், உலகத்தையே ஆண்டிருக்கக் கூடிய ஹிட்லர், தன் பிணத்தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்து போனான்.
எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பிவிடும் விதி, ஹிட்லரின் ஆணவத்தையும் அழிவை நோக்கித் திருப்பி விட்டது.
உலக வரலாறுகளைக் கூர்ந்து நோக்குங்கள்.
நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?
நினைப்பவன்தான் நீ; முடிப்பவன் அவன்.
இந்துக்களின் தத்துவத்தில் இது முக்கியமானது.
நம்முடைய லகான் இறைவன் கையிலே உள்ளது என்பதை, இந்துமதம்தான் வலியுறுத்துகிறது.
பிச்சைக்காரி ராணியான கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் `அதிர்ஷ்டம்’ என்ற பெயரிலோ, `துரதிர்ஷ்டம்’ என்ற பெயரிலோ விதியின் பரிசளிப்பு.
“ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே, இப்படி ஆகிவிட்டதே” என்று நீ பிரலாபித்துப் பயனில்லை.
“அப்படித்தான் ஆகும்” என்று நீ ஜனிக்கும் போது எழுதப்பட்டிருக்கிறது.
ராமனையும் விதி ஆண்டது, சீதையையும் விதி ஆண்டது.
காமனையும் விதி ஆண்டது, ரதியையும் விதி ஆண்டது.
சோழநாட்டுக் கோவலனின் விதி, மாதவியின் மயக்கத்திலே இருந்தது.
கண்ணகியின் விதி, மதுரையிலே இருந்தது.
பாண்டியன் நெடுஞ்செழியன் விதி, ஒரு காற்சிலம்பில் அடங்கியிருந்தது.
அலெக்சாண்டரின் விதி, பாபிலோனியாவில் முடிந்தது.
ஜூலியஸ் சீஸரின் விதி, சொந்த நண்பனின் கையிலே அடங்கியிருந்தது.
நெப்போலியனின் விதி, அவனது பேராசையிலே அடங்கியிருந்தது.
காந்திஜியின் விதி, கோட்ஸேயின் கைத்துப்பாக்கியில் அடங்கி இருந்தது.
அடிமைகள் கிளர்ந்து எழுந்ததும், ஆதிக்க வெறியர்கள் விழுந்து துடித்ததும், காலமறிந்து கடவுள் விதித்த விதி.
கடவுளே இல்லை என்று வாதிடுவோரும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று இறைவன் ஏன் விதிக்கிறான்?
தங்கள் கொள்கைகள், தங்கள் கண் முன்னாலேயே தோல்வி அடைவதைக் கண்டு சாகவேண்டும் என்றுதான்!
உண்மையான பக்தி உள்ள சிலருக்கு ஆண்டவன் ஏன் நீண்ட ஆயுளைத் தருகிறான்?
`தாங்கள் பக்தி செலுத்தியது நியாயமே’ என்று அவர்களும், அவர்களைப் பார்த்துப் பிறரும் உணர்வதற்காகத்தான்.
இறைவன் விதியை ஒரு வேடிக்கைக் கருவியாக வைத்திருக்கிறான்.
சக்தியும் சிவனும் பூமியில் பல வேடங்களில் பிறந்ததாக இந்துக் கதைகள் கூறுவது, இறைவன், தானும் விதிக்கு ஆட்பட்டு, அதன் சுவையை அனுபவிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.
அந்தக் கதைகளை வெறும் கதைகளாக நோக்காமல், இறைவனின் தத்துவங்களாக நோக்கினால், மானிடத் தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும்.
விதி-மதி ஆராய்ச்சியில், மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
அதை ஒரு கதையாக மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன்.
பிரவாகம்
ஞானி பிரகதீஸ்வரர், திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.
அவர் பெரிய மகான். உண்மையிலேயே ஞானி. சிறு வயதிலேயே துறவு பூண்டவர்.
கல்மண்டபத்தின் வடக்கில், அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.
எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.
வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வந்த ஞானியார், `யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்’ என்று தெரிவித்தார்.
யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்த்தார்கள்.
மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.
நடுத்தர வயது; தீட்சண்யமான கண்கள்; பந்தபாசங்களில் அடிபட்டுத் தேறி வந்தது போன்ற ஒரு தெளிவு.
சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.
“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.
அவர் சொன்னார்:
“சுவாமி!
விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்திருக்கின்றன.
“விதியை மதியால் வெல்லலாம் என்றும், மதியை விதி வென்று விடும்” என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன.
“எது முடிவானதோ சாமிக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.”
கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.
மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.
மண்டபம் காலியாயிற்று.
இரண்டு நிமிஷங்கள் கழித்து, “எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார்.
திபுதிபுவென்று எல்லோரும் ஓடிவந்து அமர்ந்தார்கள்.
ஞானியார் கேட்டார்:
“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?”
எல்லோரும் விழித்தார்கள்.
நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.
கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:
“பாருங்கள், இந்தச் சின்ன விஷயத்தில்கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!
இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”
கேள்வியாளர் கேட்டார்:
“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்; இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
ஞானியார் சொன்னார்:
“அறியாமையே விதியின் கைப்பாவை.
அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால், விதியும் இல்லை, விதித்தவனும் இல்லை.”
கேள்வியார் கேட்டார்:
“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கின்றன!
இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.
இப்படித்தான் வாழவேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழவிடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்தப் பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ, அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி.”
கேள்வியாளர் கேட்டார்:
“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது? எங்கிருந்து தொடங்குகிறது?”
ஞானியார் சொன்னார்:
“சூன்யத்தில் நிர்ணயிக்கப்படுகிறது; ஜனனத்தில் தொடங்குகிறது.
தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்கள் எத்தனை பேர்?
வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது.
கோழை தோல்வியுற்றால், அது கோழைத்தனத்தால் கிடைத்தது.
ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ, அவை விதியால் நிர்ணயிக்கப்பட்டவை!
வரலாற்று நதியைத் தனிமனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை.
விதியே அழைத்துச் சென்றிருக்கிறது.
கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.
மாதர்களாலேயே ஆரம்பமான பிரெஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!
ஒன்று நடைபெற்ற பின்னால், `கொஞ்சம் அப்படிச் செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!
மதி ஏன் தாமதமாகச் சிந்திக்கிறது?
விதி முந்திக்கொண்டு விட்டது!”
கேள்வியாளர் கேட்டார்:
“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக்கூடியது ஒன்றுமே இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கிறது!
பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.
அதைப் பள்ளம் என்று தெரியவைத்தது விதி.
விதி வாசலைத் திறந்து கொடுத்தால், மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.
விதி வாசலை மூடிவிட்டால், மதி அதிலே மோதிக் கொண்டு வேதனை அடைகிறது.
விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.
தந்தையைக் கொன்று சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சிலநேரம் விதியை வென்றிருக்கலாம்.
ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்றுவிடுகிறது.
நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாதவை உறுதிபெறுவதும், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினாலே.
அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.
சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவத்தால் வந்த மதி.
யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.
தொடக்கம் பலவீனமானால், முடிவு பலமாகிறது.
தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது.
தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.
அப்படி யாராவது இருக்கிறார்களா?”
ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.
கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.
மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஞானியார் அமைதியாகக் கேட்டார்:
“உங்கள் மதி வேலை செய்யவில்லையா?”
கேள்வியாளர் அமர்ந்தார்.
ஞானியார் சொன்னார்:
“ஜனனத்துக்கு முன்பும் மரணத்திற்குப் பின்பும், நாம் எங்கிருந்தோம், எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது.
இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது.
நான் துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று.
காலை வெயிலில், நமது நிழல் நம் உயரத்தைவிடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது.
மதியத்தில் நம்மைவிட அது கூனிக்குறுகிக் காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது.
மாலையில் அது மீண்டும் உயரமாகி விடுகிறது.
ஆனால், நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது.
நம் உருவமே விதி; நம் நிழலே மதி!”
மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.
சபை கலைந்தது.
கேள்வியாளர் மட்டும் வெளியே நின்றுகொண்டிருந்தார்.
“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே!
மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆட்சி செய்ய முடியாது” என்றபடி ஞானியார் நடந்தார்.
கேள்வியாளர் பின் தொடர்ந்தார்.

விதியை வென்ற மதி


விதியை வென்ற மதி!



எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் 

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால்அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்
வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆகமன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்துஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.


இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்
எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்மன்னனாகவே மடியலாமே!‘ என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.


மன்னன் வந்தான்
அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்துமுடிசூடி,தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர்இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்அதற்கு இவ்வளவு அலங்காரமா!
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்
, ”மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!
கட்டளைகள் பறந்தன
காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க
மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம்
இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பிபுரண்டு,வெம்பிச் செல்வார்கள். இவனோமகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் 
மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?”
” தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!
அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?”
” தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!
பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?”
” அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமாஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்
காட்டைத் திருத்தி உழுதார்கள்;இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள்
தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடுவாசல்அரண்மனைஅந்தப்புரம்சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த
4000 பேரும் தங்கள் மனைவிகுழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை
என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பாவாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால்இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!” என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.


மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை
?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.


ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்
அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!


அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல
நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!